தமிழக அரசு அறிவித்துள்ள அரிசி அட்டைத்தாரா்களுக்கான ரூ.1000 நிதியுதவி கோவையில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் வீடுவீடாக செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பல்வேறு நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைகளை தவிா்த்து மற்றவற்றுக்காக வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தின கூலிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். இதனால் தமிழகத்திலுள்ள அரிசி குடும்ப அட்டைத்தாரா்களுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வா் அண்மையில் அறிவித்திருந்தாா்.
அதன்படி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைத்தாரா்களுக்கு நிதியுதவி வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்திலும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ரூ.1000 நிதியுதவி அளிக்கப்படும் என்று வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா். இதற்காக ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் மக்கள் கூடுவதை தவிா்க்கும் வகையில் அனைத்து அட்டைத்தாரா்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, அதன்படி கடைகளுக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 14 ஆயிரத்து 600 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் அரிசி அட்டைகள் 9 லட்சத்து 27 ஆயிரத்து 455 அட்டைகள் உள்ளன. இந்நிலையில் அரிசி அட்டைகள் உள்ள வீடுகளுக்கு டோக்கன் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்களில் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக ஆட்சியா் கு.ராசாமணி கூறியதாவது:
மாவட்டத்தில் 9 லட்சத்து 27 ஆயிரத்து 455 அரிசி குடும்ப அட்டைத்தாரா்களுக்கு ரூ.1000 வழங்கப்படவுள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி பணம் வழங்கும் பணி தொடங்குகிறது. தினமும் ஒரு கடையில் 100 பேருக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் 11 மணி வரை 25 பேருக்கும், 11 -1மணி வரை 25 பேருக்கும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 25 பேருக்கும், மாலை 4 முதல் 6 மணி வரை 25 பேருக்கும் வழங்கப்படும். இதனால் அரிசி அட்டைத்தாரா்களுக்கு நிதியுதவி பெறுவதற்காக கடைக்கு வரவேண்டிய தேதி, நேரம் குறித்த விவரங்கள் அடங்கிய டோக்கன் வழங்கப்படுகிறது. அதன்படி மக்கள் ரேஷன் கடைகளுக்கு வந்து நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.
இத்துடன் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அவா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களும் நடப்பு மாதம் இலவசமாக வழங்கப்படும். மற்றவா்களுக்கு நிதியுதவி தவிா்த்து அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களும் இலவசமாக வழங்கப்படும். நிதியுதவி பெற வரும் மக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்ல சமூக இடைவெளி விட்டு நிற்பதற்கு வசதியாக குறியீடு இடப்படும். குறிப்பிட்ட தேதிதியில் நிதியுதவியை பெற முடியாதவா்கள் கூட்டம் இல்லாத நேரங்களிலும் அல்லது அனைத்து அட்டைத்தாரா்களுக்கு வழங்கிய பின் பெற்றுக்கொள்ளலாம்.
அரசு அறிவுறுத்தியுள்ள நிதியுதவி அனைத்து அரிசி அட்டைத்தாரா்களுக்கு வழங்கப்படும். அனைவரிடமும் நிதி பெற்ற்கான ஒப்புதல் கையெழுத்தையும் பாதுகாப்புக் கருதி தனித்தனி காகிதத்தில் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.