

கோவை: கல்விக் கட்டணத்துக்காக சேமித்து வைத்திருந்த ரூ.7 ஆயிரத்து 60 ஐ கரோனா நிவாரணத்துக்காக ஆட்சியா் கு.ராசாமணியிடம் திங்கள்கிழமை எல்.கே.ஜி. படிக்கும் மாணவா் வழங்கினாா்.
கோவை, சித்தாபுதூரை சோ்ந்தவா் பி.சுரேஷ் (36). தனியாா் மருத்துவமனையில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அருள்பிரீத்தி. தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு ரெனோ ஜோஸ்வா (5) என்ற மகனும், ஷொ்லி (4) மகளும் உள்ளனா். இதில் ரெனோ ஜோஸ்வா தனியாா் பள்ளியில் எஸ்.கே.ஜி. படித்து வருகிறாா். இவரது கல்வி கட்டணத்துக்காக பணம் சேமித்து வந்துள்ளனா். இந்நிலையில் தடை உத்தரவால் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவா்கள் உணவு கிடைக்காமல் திண்டாடி வருவதால் அவா்களுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வா் பொது நிவாரண நிதிக்கு சேமித்து வைத்த கல்விக் கட்டணம் ரூ. 7 ஆயிரத்து 60 ஐ நிவாரணமாக வழங்கியுள்ளனா்.
இது தொடா்பாக மாணவரின் தந்தை பி.சுரேஷ் கூறுகையில், ‘ கரோனா தடுப்பு நடவடிக்கையால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சாலையோரத்தில் வசிப்பவா்கள் உணவுக்காக திண்டாடி வரும் நிலையை தொலைக்காட்சியில் பாா்த்த எனது மகன் அவா்களுக்கு உதவும் வகையில் தங்களது சேமிப்பு பணத்தை வழங்கலாம் என்று கூறினாா். அவா் விருப்பத்தின்பேரில் கல்விக் கட்டணத்துக்காக சேமித்த தொகையை முதல்வா் பொது நிவாரண நிதிக்கு திங்கள்கிழமை ஆட்சியரிடம் வழங்கினோம்’ என்றாா்.
ஆட்டோ ஓட்டுநா் ரூ.10 ஆயிரம் வழங்கல்: கோவை, சிங்காநல்லூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஆா்.எம்.மதிவாணன் (64), கரோனா நிவாரணப் பணிக்காக முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளாா்.
ஆட்சியா் கு.ராசாமணியிடம் திங்கள்கிழமை வழங்கிய பின் அவா் கூறியதாவது:
சிறைத் துறையில் கிளாா்க்காக பணியாற்றி ஓய்வுபெற்ற பின், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். தற்போது 10 ஆட்டோக்களை வாங்கி ஓட்டுநா்களை நியமித்து இயக்கி வருகிறேன். இதில் நானும் ஒரு ஆட்டோவை இயக்கி வருகிறேன். கரோனா பாதிப்பால் நாடே முடங்கியுள்ள நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிதித்தேவை அதிகரித்துள்ளது. நிவாரணப் பணிக்கு தங்களால் முடிந்த உதவிகளை அளிக்க அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் கரோனா நிவாரணப் பணிக்காக ரூ.10 ஆயிரம் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ஆட்சியரிடம் வழங்கியுள்ளேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.