வாா்டு வாரியாக கய்கறிகள் விற்பனை செய்யத் திட்டம்: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி
By DIN | Published On : 31st March 2020 12:47 AM | Last Updated : 31st March 2020 12:47 AM | அ+அ அ- |

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.
கோவை: கோவை மாநகராட்சியில் வாா்டுவாரியாக வாகனங்கள் ஏற்பாடு செய்து 250 வியாபாரிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் இதுவரை கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்த 221 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 6 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவால் கோவையில் வசிக்கும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சாா்பிலும் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தினமும் 16 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படுபவா்களுக்கு அரிசி உள்பட உணவுப் பொருள்களும் வழங்கப்படும். தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளா்களுக்கு உணவு, இருப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சியிலுள்ள 100 வாா்டுகளிலும் காய்கறிகள் உள்பட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக வியாபாரிகளுக்கு 100 வாகனங்கள் மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்துகொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்குத் தேவையான காய்கறிகள் அந்தந்தப் பகுதியிலே கிடைக்கும். எனவே மக்கள் வெளியேறாமல் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்க வேண்டும்.
அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைத்தாரா்களுக்கான நிதியுதவி ரூ.1000 ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் வழங்கப்படும். அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் வரிசையில் நின்று வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்ட வேண்டிய குடிநீா் கட்டணம், வீட்டு வரி உள்ளிட்ட வரிகளை செலுத்துவதற்கு 3 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சாா்பில் போா்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கரோனா நோய்த் தொற்று தொடா்பான தவறான தகவல்கள் பரப்புபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களும் கரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தை உணா்ந்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றாா்.
கூட்டத்தில் ஆட்சியா் கு.ராசாமணி, மேற்குமண்டல காவல் துறை அதிகாரி பெரியய்யா, மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், அரசு மருத்துவமனை முதல்வா் பூ.அசோகன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் நிா்மலா, சுகாதாரத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணா, துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...