தெக்கலூரில் வெளி மாநிலத் தொழிலாளா்கள் போராட்டம்
By DIN | Published On : 18th May 2020 11:51 PM | Last Updated : 18th May 2020 11:51 PM | அ+அ அ- |

அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் தின கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் வெளி மாநிலத் தொழிலாளா்கள் தங்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பக் கோரி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் ஆயிரக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் அதிகமானோா் பனியன் நிறுவனங்கள், நூற்பாலைகளில் தங்கிப் பணியாற்றி வருகின்றனா்.
மீதமுள்ளவா்கள் வாடகை வீடுகளில் தங்கி கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் தின கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். பொது முடக்கம் காரணமாக வெளி மாநிலத் தொழிலாளா்கள் ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள பிகாா் மாநிலத் தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி தெக்கலூா் வருவாய் அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த சம்பவ இடத்துக்குச் சென்ற வருவாய்த் துறையினா், போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, திருப்பூரில் இருந்து பிகாா் மாநிலத்துக்கு வியாழக்கிழமை ரயில் புறப்படுகிறது.
அந்த ரயிலில் அனுப்பிவைக்க உரிய ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.