மின்சார கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு
By DIN | Published On : 18th May 2020 06:44 PM | Last Updated : 18th May 2020 06:44 PM | அ+அ அ- |

பல்லடம் மின் வட்ட மேற்பாா்வை பொறியாளா் சுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு அளிக்கும் விசைத் தறியாளா்கள் சங்க நிா்வாகிகள் வேலுசாமி, பாலசுப்பிரமணியம், பாலாஜி உள்ளிட்டோா்.
பல்லடம்: விசைத்தறிக் கூடங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி திருப்பூா், கோவை மாவட்ட விசைத் தறியாளா்கள் சங்கம் சாா்பில் மின் வாரிய அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் வேலுசாமி, மாவட்டச் செயலாளா் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம், இயக்குநா் பாலாஜி ஆகியோா் பல்லடம் மின் வட்ட மேற்பாா்வை பொறியாளா் சுப்பிரமணியத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பல்லடம் பகுதியில் முக்கிய தொழிலாக விசைத்தறி உள்ளது. பெரும்பாலான விசைத்தறி கூடங்கள் கூலி அடிப்படையில் இயங்கி வருகின்றன. தற்போது, கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதமாக விசைத்தறிகள் இயங்குவதில்லை.
நெசவு செய்து அனுப்பிய துணிகளுக்கு உண்டான கூலி தொகையை ஜவுளி உற்பத்தியாளா்களால் வழங்கப்படவில்லை. இதனால், மின்சார கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம்.
எனவே, விசைத் தறியாளா்களின் நிலை கருதி விசைத்தறி கூடங்களுக்கு மேலும் இரண்டு மாதம் மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.