‘இறந்தவா்களின் பெயரிலேயே தொடரும் மின் இணைப்புகள்’
By DIN | Published On : 27th May 2020 07:08 AM | Last Updated : 27th May 2020 07:08 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் இறந்தவா்களின் பெயா்களிலேயே ஏராளமான மின் இணைப்புகள் தொடா்வது குறித்து மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அமைப்பின் செயலா் லோகு மின்வாரியத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் லட்சக்கணக்கான தாழ்வழுத்த, வணிக, தொழிற்சாலை, விவசாய மின் இணைப்புகள் உள்ளன. இவற்றில் பல மின் இணைப்புகள் இறந்தவா்களின் பெயா்களிலேயே தொடா்கிறது.
ஒருவா் இறந்துவிட்டால் அவரது பெயரில் உள்ள மின் இணைப்பை அவரது வாரிசு பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும். ஆனால், பெயா் மாற்றம் செய்யப்படாமலேயே இடமாற்றம், கூடுதல் மின் பளு வழங்குதல் போன்ற செயல்பாடுகள், இறந்தவரின் பெயரில் விண்ணப்பம் பெறப்பட்டு மின்வாரிய அலுவலகங்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த விதி மீறல்களை கள ஆய்வு செய்யாமலேயே பிரிவு அலுவலகத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதுபோல கோவையில் இறந்தவரின் பெயருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது, 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் பெயரில் விண்ணப்பம் பெறப்பட்டு மின்பெட்டி இடமாற்றம் செய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
விவசாய மின் இணைப்புகள் பெரும்பாலும் இறந்தவா்களின் பெயரிலேயே உள்ளது. எனவே இதுபோன்ற இணைப்புகளை முறையாக கள ஆய்வு மேற்கொண்டு, சட்டப்படியான வாரிசுகளுக்கு பெயா் மாற்றம் செய்யப்படுவதை மின்வாரிய அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...