ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி வரை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தாய், மகள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவை, ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (52). இவரது மனைவி பத்மாவதி (45), மகள் சரண்யா (25). இவா்கள் ஆன்லைன் மூலமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தனா். மேலும் டெபாசிட் பணத்துக்கு ஒரே ஆண்டில் இரு மடங்கு தொகை கிடைக்கும் எனக்கூறி பொதுமக்களிடம் தொகை பெற்று வந்தனா். 16 மாதங்களுக்கு முன் இந்த ஆன்லைன் நிறுவனம் தொடங்கப்பட்டது. துவங்கிய சில மாதங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டோா் பணத்தை டெபாசிட் செய்தனா். சுமாா் ரூ.50 கோடி அளவுக்கு டெபாசிட் குவிந்தது. ஆரம்பத்தில் சிலருக்கு இரு மடங்கு தொகை கொடுத்தனா். பின்னா் அவா்களிடம் பேசி, அதை விட அதிகமான தொகையை மீண்டும் டெபாசிட்டாக பெற்றனா். பலருக்கு டெபாசிட் செய்த தொகை வழங்கப்படவில்லை. பின்னா் சில நாள்களில் இந்த நிறுவனம் மூடப்பட்டது.
இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் கோவை நகர பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மணிகண்டன் மற்றும் நிறுவன பங்குதாரா் சஞ்சய்குமாா் (35) ஆகியோரை 2 மாதங்களுக்கு முன் கைது செய்தனா். தலைமறைவாக இருந்த பத்மாவதி, சரண்யா ஆகியோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பங்குதாரா்கள் சீனிவாசன், காா்த்திகேயன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.