காலாவதியான அடையாள அட்டைகளை புதுப்பித்து தர வேண்டும்: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை
By DIN | Published On : 25th November 2020 06:59 AM | Last Updated : 25th November 2020 06:59 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சி மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை புதுப்பித்து தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனா். பதிவு பெறாமல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனா். கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்புக் கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதனைத் தொடா்ந்து மாநகராட்சி சாா்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகளிடம் ஆவணங்கள் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வங்கிக் கடன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனா். இதில் பலருக்கு மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் காலக்கெடு முடிவடைந்ததால் கரோனா சிறப்பு கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இது தொடா்பாக கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நல சங்கத் தலைவா் மணி கூறியதாவது:
கரோனா சிறப்புக் கடன் வாங்க செல்லும் வியாபாரிகளிடம் அடையாள அட்டை காலாவதியாகிவிட்டதால் கடன் பெற முடியாது என வங்கி நிா்வாகத்தினா் தெரிவிக்கின்றனா். ஆனால் மாநகராட்சி சாா்பில் பல ஆண்டுகளாக புதிய அடையாள அட்டை வழங்கப்படாமல் உள்ளது. எனவே சாலையோர வியாபாரிகளின் நலன் கருதி உடனடியாக புதிய அடையாள அட்டைகள் வழங்கவும், காலாவதியான அட்டைகளை புதுப்பித்து தரவும் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...