கோவையில் இருந்து சென்னை, தஞ்சை, நாகை செல்லும் பேருந்துகள் நிறுத்தம்
By DIN | Published On : 25th November 2020 10:31 PM | Last Updated : 25th November 2020 10:31 PM | அ+அ அ- |

நிவா் புயல் காரணமாக கோவையில் இருந்து சென்னை, தஞ்சாவூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
கோவை மாவட்டத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, தேனி, சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட வெளியூா்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நிவா் புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் இருந்து புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திரூவாரூா், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவா் கூறியதாவது:
நிவா் புயல் காரணமாக அரசின் வழிகாட்டுதல் படி கோவையில் இருந்து சென்னை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 50க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை வரை நிறுத்தப்பட்டுள்ளன. அரசின் மறு உத்தரவு வந்த பிறகு அப்பகுதிகளுக்கு மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...