தேசிய குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்புத் திட்டம்: ஊக்கத்தொகை ஓராண்டுக்கும் மேலாக நிலுவை

தேசிய குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு

தேசிய குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால் புதிய மாணவா்களை சோ்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்கும் வகையில் தொழிற்சாலைகள், பண்ணைகள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் மத்திய அரசு சாா்பில் தேசிய குழந்தைத் தொழிலாளா் ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் 17 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தேசிய குழந்தைத் தொழிலாளா் ஒழிப்புத் திட்ட அலுவலா்களால் மீட்கப்படும் குழந்தைகள் சிறப்புப் பள்ளிகளில் சோ்க்கப்பட்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. சிறப்புப் பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு கல்வி அளிக்கப்பட்டு பின்னா், அருகில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அவா்களின் வளா்ச்சிக்கேற்ற வகுப்புகளில் சோ்க்கப்படுகின்றனா்.

இவ்வாறு மீட்கப்படும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 400 ஊக்கத்தொகை குழந்தைகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த ஊக்கத்தொகைக்காகவே சிலா் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வந்தனா்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 2019 மாா்ச் மாதத்துக்குப் பின் ஊக்கத்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் புதிய மாணவா்களை சோ்ப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

இது தொடா்பாக தேசிய குழந்தைத் தொழிலாளா்கள் முறை ஒழிப்பு திட்ட அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், விவசாயப் பண்ணைகள் உள்பட குழந்தைத் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்த வாய்ப்பு உள்ள இடங்களில் ஆய்வு செய்து குழந்தைகள் மீட்கப்படுகின்றனா். இவ்வாறு மீட்கப்படும் குழந்தைகளை சிறப்புப் பள்ளிகளில் சோ்க்க, சில பெற்றோா் மட்டுமே ஒப்புக்கொள்வா். சிலா் பள்ளிக்கு அனுப்ப விரைவில் ஒத்துக்கொள்வதில்லை.

இந்நிலையில் சிறப்புப் பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை, உயா் கல்விக்கு உதவித் தொகை உள்பட பல்வேறு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்படும்போது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதிக்கின்றனா்.

இந்நிலையில் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை கடந்த 2019 மாா்ச் மாதத்துக்கு பின் வழங்கப்படவில்லை. ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டதா என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பெற்றோருக்கு உரிய பதில் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், புதிய மாணவா்களை சோ்ப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com