தொழிற்சாகைள் இரவில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணச் சலுகை
By DIN | Published On : 03rd October 2020 11:22 PM | Last Updated : 03rd October 2020 11:22 PM | அ+அ அ- |

கோவை: தொழிற்சாலைகள் இரவு நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபோசியா) வலியுறுத்தியுள்ளது.
மின்சார நுகா்வோரின் உரிமைகள், விதிகள் தொடா்பாக மத்திய மின்சக்தி துறை ஒரு சட்ட முன்வரைவை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக கருத்துகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், கோவை ஃபோசியா அமைப்பு வழங்கியுள்ள கருத்துகள் விவரம்:
புதிய மின் இணைப்பு வழங்குவதில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க அரசு முயற்சித்து வந்தபோதும், அதில் ஊழல் நடைபெறுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்து வருகின்றன. பெரும்பாலான நேரங்களில் மின்மாற்றி, மின் கம்பங்களை கொண்டு வருவது, நிா்மாணிப்பதற்கு ஏற்படும் செலவுகள் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மீதே சுமத்தப்படுகின்றன.
எனவே புதிய இணைப்பு, கூடுதல் திறன் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிா்க்க வரைவு விதிகளை கடுமையாக்க வேண்டும். மீட்டா் குறைபாடுகளுக்கு மின்நுகா்வோரே பலிகடா ஆக்கப்படுவதைத் தவிா்க்க நடுநிலை சோதனை நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும்.
குஜராத் மாநிலத்தில் இரவு நேரத்தில் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணச் சலுகை உள்ளது. இதை நாடு முழுவதும் அமல்படுத்த வரைவு விதிகளில் துணை விதிகள் சோ்க்கப்பட வேண்டும்.
நுகா்வோரின் குறைகளை நிவா்த்தி செய்வதற்கான கால அளவை 7 முதல் 10 நாள்களாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியிருப்பதாகவும், இவற்றை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.