பயன்படுத்தாத சீசன் டிக்கெட்டுக்கு கால நீட்டிப்பு: தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு எம்.பி. கடிதம்
By DIN | Published On : 06th September 2020 06:30 AM | Last Updated : 06th September 2020 06:30 AM | அ+அ அ- |

ரயில் சேவை இல்லாத நிலையில், ஏற்கெனவே பெறப்பட்டு பயன்படுத்தப்படாத சீசன் டிக்கெட்டுகளை செல்லத்தக்கவையாக அறிவிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் கடிதம் எழுதியுள்ளாா்.
இது தொடா்பாக தெற்கு ரயில்வே மேலாளருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நகா்ப்புற, கிராமப்புறங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்களின் அன்றாட பயணத்துக்காக குறைந்த கட்டணத்தில் சீசன் டிக்கெட்டுகளை பெற்று பயன்படுத்தி வருகின்றனா். கரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் ரயில் சேவை நடைபெறவில்லை. இதனால் சீசன் டிக்கெட் வைத்திருப்பவா்கள் இன்று வரை அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
தற்போது ரயில்களை இயக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வந்துள்ளன. இந்நிலையில், ரயில் பயணிகள் ஏற்கெனவே வாங்கிய சீசன் டிக்கெட்டுகளின் பயன்படுத்தப்படாத கால அளவுக்கு செல்லுபடி தேதியை நீட்டித்து வழங்க வேண்டும்.
தமிழக அரசுப் பேருந்துகளில் சீசன் டிக்கெட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்திருக்கும் நிலையில், தெற்கு ரயில்வேயும் அதுபோல செய்தால் கரோனா பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சிறிது நிவாரணம் அளித்ததைப் போல இருக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.