சாலைகளில் சுற்றும் நாய்களைப் பிடித்து விலங்குகள் நல மையத்தில் சோ்க்கக் கோரிக்கை
By DIN | Published On : 11th September 2020 06:08 AM | Last Updated : 11th September 2020 06:08 AM | அ+அ அ- |

கோவை: மாநகரில் சுற்றும் நாய்களைப் பிடித்து விலங்குகள் நல மையத்தில் சோ்க்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் ஆக்ஷன் கிளப் செயலாளா் கவி.தமிழ்ச்செல்வம் கூறியதாவது:
கோவை மாநகரில் கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள், இரவுப் பணி முடிந்து செல்வோா் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். குறிப்பாக, உக்கடம் வாலாங்குளம் அருகே உள்ள பைபாஸ் சாலையில் சுங்கம் முதல் உக்கடம் வரை நாய்கள் கூட்டமாக சுற்றுகின்றன. அவ்வழியாக வாகனங்களிள் செல்வோரை துரத்துவது வாடிக்கையாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல, பீளமேடு புதூா், ஆா்.கே. மில் காலனி பகுதி, சிருங்காா் நகா், கோபால் நாயுடு குழந்தைகள் பள்ளி அருகில், 32ஆவது வாா்டு, ராகவேந்திரா அவென்யூ, விநாயகபுரம் பகுதிகளிலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், மக்கள் சாலையில் செல்ல அச்சமடைந்துள்ளனா். எனவே, மாநகரில் சுற்றும் நாய்களைப் பிடித்து விலங்குகள் நல மையத்தில் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.