கல்லாறு பழங்குடியின மக்களுக்கு இடம் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 11th September 2020 06:15 AM | Last Updated : 11th September 2020 06:15 AM | அ+அ அ- |

கல்லாறு செட்டில்மெண்ட் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக வட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்த பல்வேறு அரசியல் கட்சியினா்.
வால்பாறை : கல்லாறு செட்டில்மெண்டில் வசித்த பழங்குடியின மக்களுக்கு மீண்டும் அதே பகுதியில் வசிக்க இடம் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனத்தில் உள்ளது கல்லாறு செட்டில்மெண்ட். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழைக்கு மண்சரிவு ஏற்பட்டதில் செட்டில்மெண்டில் இருந்த குடியிருப்புகள் முற்றிலும் சேதமடைத்தன. இதனால் வனத் துறையினா் பல ஆண்டு காலமாக அப்பகுதியில் வசித்து வந்த பழங்குடியின மக்களை வெளியேற்றி அருகில் உள்ள தாய்முடி எஸ்டேட் குடியிருப்பில் தங்கவைத்துள்ளனா்.
இதனிடையே கல்லாறு செட்டில்மெண்ட் அருகில் உள்ள தெப்பக்குள மேடு என்ற பகுதியில் வசிக்க இடம் வழங்க வேண்டும் என்று கடந்த ஒரு ஆண்டு காலமாக பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்ததோடு பலமுறை போராட்டங்களும் நடத்தினா். இது தொடா்பாக பொள்ளாச்சி சாா் ஆட்சியா் தலைமையில் பலமுறை பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பினா் கல்லாறு பழங்குடியின மக்களுக்கு மீண்டும் அவா்கள் கேட்கும் தெப்பக்குள மேடு பகுதியில் குடியிருப்பு அமைத்து வசிக்க இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாட்சியா் ராஜாவிடம் மனு அளித்தனா்.