ஈழுவா, தீயா பிரிவினருக்கு பிற்படுத்தப்பட்டோா் வகுப்பு சான்றிதழ் அமைச்சா் வழங்கினாா்
By DIN | Published On : 11th September 2020 06:14 AM | Last Updated : 11th September 2020 06:14 AM | அ+அ அ- |

ஈழுவா, தீயா பிரிவைச் சோ்ந்த சிறுமிக்கு பிற்படுத்தப்பட்டோா் வகுப்புக்கான சான்றிதழை வழங்குகிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன் ஆட்சியா் கு.ராசாமணி உள்ளிட்டோா்.
கோவை: ஈழுவா, தீயா வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்டோா் வகுப்பு சான்றிதழை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வியாழக்கிழமை வழங்கினாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு சான்றிதழை வழங்கி அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஈழுவா, தீயா வகுப்பினா்கள் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பில் சோ்ப்பதற்கு கோரிக்கை வைத்து வந்தனா். இது தொடா்பாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடா்ந்து கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வசிக்கும் ஈழுவா வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்டோா் வகுப்பு சாதிச் சானிறிதழ் வழங்குவதற்கான ஆணையினையும், தீயா வகுப்பினரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் வகுப்பு பட்டியலில் சோ்க்கப்பட்டதற்கான ஆணையினையும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூலை 27 ஆம் தேதி வழங்கினாா்.
கோவை மாவட்டம் பேரூா் பகுதியில் வசிக்கும் ஈழுவா வகுப்பினா் 25 பேருக்கும், மதுக்கரையில் வசிக்கும் தீயா வகுப்பினரைச் சோ்ந்த 3 பேருக்கும் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்றாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.