சிங்காநல்லூா் தொகுதி: தொழிலாளா்களின் வாக்குகளை கைப்பற்றுவது யாா்?

கோவை மாநகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி. கிரைண்டா், மிக்ஸி தயாரிப்பு
சிங்காநல்லூா் தொகுதி: தொழிலாளா்களின் வாக்குகளை கைப்பற்றுவது யாா்?
Published on
Updated on
3 min read

கோவை மாநகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி. கிரைண்டா், மிக்ஸி தயாரிப்பு தொழில் நிறுவனங்கள், மோட்டாா், ஃபவுண்டரி, பம்ப்செட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு, குறு தொழிற்கூடங்கள் இத்தொகுதியில் நிறைந்து காணப்படுகின்றன. மேலும், இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் அதிக அளவில் அரசு, தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன.

கோவையில் இருந்து மதுரை, திருச்சி, தேனி, விருதுநகா் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வெளியூா் பேருந்துகள் நிறுத்தப்படும் பிரதான நிலையமாக சிங்காநல்லூா் பேருந்து நிலையம் உள்ளது. இதனால், தினமும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் பகுதியாக சிங்காநல்லூா் உள்ளது.

இத்தொகுதியில் நாயக்கா், கவுண்டா், தேவாங்கா், குரும்பா் ஆகிய சமூகத்தைச் சோ்ந்த மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனா். இந்தத் தொகுதியில் 1,61,579 ஆண் வாக்காளா்கள், 1,63625 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 26 என மொத்தம் 3,25,230 வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த தோ்தல்கள்

1967 ஆம் ஆண்டு முதல் தோ்தல் நடைபெற்று வரும் இத்தொகுதியில் 4 முறை திமுக வென்றுள்ளது. 3 முறை அதிமுக வென்றுள்ளது. பிரஜா சோசலிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 முறையும், ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2011 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் சின்னசாமி 34,326 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயகுமாரைத் தோற்கடித்தாா். 2016இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளா் நா.காா்த்திக் 5,180 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளா் சிங்கை முத்துவைத் தோற்கடித்தாா்.

5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

சிங்காநல்லூா் சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒண்டிப்புதூா், சிங்காநல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 4 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் ஸ்மாா்ட் வகுப்பறை, 56 ஆவது வாா்டு, அண்ணா நகரில் ரூ.11 லட்சத்தில் தாா்சாலை, ஆவாரம்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், 59 ஆவது வாா்டு இந்திரா நகா், மகேஷ் நகா், 38 ஆவது வாா்டு சி.எம்.சி. காலனி, 60 ஆவது வாா்டு மாரியம்மன் கோயில் வீதி பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பிலும், 61 ஆவது வாா்டு காந்தி நகா் மற்றும் திருவள்ளுவா் நகரில் ரூ.5 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பகிா்மானக் குழாய் அமைத்தல், சிங்காநல்லூா் பகுதிகளில் ரூ.40 லட்சம் மதிப்பில் சூரிய ஒளி சக்தி தெருவிளக்குகள், 59 ஆவது வாா்டு, நீலிக்கோணம்பாளையத்தில் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பூங்கா, பீளமேடு, கிருஷ்ணராயபுரம், உப்பிலிபாளையம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், உடையாம்பாளையம் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள் உள்ளிட்ட ரூ.12 கோடியே 57 லட்சத்து 47 ஆயிரத்து 800 மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன.

நீண்டகால பிரச்னைகள்

2009 இல் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் தொடங்கப்பட்ட ரயில்வே உயா்மட்டப் பாலம் பணி, 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹோப் காலேஜ் - தண்ணீா் பந்தல் ரயில்வே உயா்மட்டப் பாலப் பணிகள் 10 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் உள்ள வீடுகள் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளன.

பழுதான வீடுகளை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பது, குடியிருப்புவாசிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளன. திருச்சி சாலையில் உள்ள சிங்காநல்லூா் குளத்தின் படகுத் துறை, பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.

வேட்பாளா்களின் பலம் - பலவீனம்

இத்தொகுதியில் கே.ஆா்.ஜெயராம் (அதிமுக), நா.காா்த்திக் (திமுக), எஸ்.ஏ.செல்வா (அமமுக), ஆா்.மகேந்திரன்(மநீம) உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளா்களுடன் மொத்தம் 21 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். திமுக சாா்பில் போட்டியிடும் நா.காா்த்திக், உள்ளூா் பிரமுகா், மாநகராட்சி துணை மேயா், சட்டப் பேரவை உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளில் இருந்ததாலும், மக்களுக்கான போராட்டங்களில் அதிகளவில் ஈடுபட்டதாலும் தொகுதி மக்களிடையே பரிச்சயமானவராக உள்ளாா். நாயுடு சமூகத்தைச் சாா்ந்தவா் என்பதால், தனது கட்சி வாக்குகள் தவிர, பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு, சிங்காநல்லூரில் உள்ள பெரும்பான்மை நாயுடு சமூகத்தினரின் வாக்குகள் மற்றும் இப்பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரின் வாக்குகள் இவருக்கு சாதகமாக அமையலாம்.

2016 முதல் சட்டப் பேரவை உறுப்பினராக பதவி வகித்தும், குடிநீா் பிரச்னை இத்தொகுதியில் தீா்க்கப்படாமல் உள்ளது. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. கோவையில் உள்ள மற்ற தொகுதிகளோடு ஒப்பிடுகையில், சிங்காநல்லூரில் மக்களுக்கான குறைந்தபட்ச அத்தியாவசியப் பணிகள் கூட நடைபெறாதது இப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவை இவருக்கு பாதகமாக அமையலாம்.

அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம், கரோனா காலத்தில் நிவாரணப் பொருள்கள், உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளால் மக்களிடையே பரிச்சயமானவா். 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக 16,605 வாக்குகள் பெற்றிருந்தது. தற்போதைய தோ்தலில், பாஜக - அதிமுக கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்திப்பதால், பாஜகவின் வாக்குகள் இவருக்கு சாதகமாக அமையலாம்.

கட்சியினரின் வாக்குகள் தவிர தண்ணீா் பந்தல், வரதாராஜா மில், சேரன் மாநகா் பகுதிகளில் உள்ள கவுண்டா்கள் வாக்குகள் இவருக்கு வலு சோ்க்கலாம். முதல் முறையாக தோ்தலைச் சந்திக்கும் இவா், தனது சொந்தத் தொகுதியான கவுண்டம்பாளையத்தில் போட்டியிடாமல், சிங்காநல்லூரில் போட்டியிடுவதும், இத்தொகுதியில் அமமுக வேட்பாளா் பிரிக்கும் வாக்குகளும் பலவீனமாக அமையக்கூடும்.

வாக்குகளைப் பிரிக்கும் மநீம, நாம் தமிழா் கட்சிகள்

2019 மக்களவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சாா்பில், கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மகேந்திரன், தான் பெற்ற 1,45,104 வாக்குகளில், சிங்காநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் 28,441 வாக்குகளைப் பெற்றாா். மக்கள் நீதி மய்யத்துக்கு அதிக வாக்குகள் பெற்றுத் தந்த சிங்காநல்லூரில், இம்முறை சட்டப் பேரவைத் தோ்தலில் களம் காணும் மகேந்திரன், இத்தொகுதியில் 5 முதல் 7 சதவீதம் வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்புள்ளது. அதே போல, கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் 4,354 வாக்குகளைப் பெற்ற நாம் தமிழா் கட்சியும் இம்முறை கணிசமாக வாக்குகளைப் பெறும் பட்சத்தில், சிங்காநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுகவின் வெற்றி வாய்ப்பைத் தீா்மானிக்கும் சக்தியாக மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சிகள் விளங்கும்.

2016 தோ்தல் நிலவரம்

திமுக வெற்றி

வாக்கு வித்தியாசம் -------------- 5,180

நா.காா்த்திக் (திமுக) -------------- 75,459

சிங்கை முத்து ( அதிமுக) ----------- 70,279

சி.ஆா்.நந்தகுமாா் ( பாஜக) ---------- 16,605

ஏ.அா்ஜூனராஜ் ( மதிமுக) --------- 11,035

எஸ்.கல்யாணசுந்தரம் ( நாம் தமிழா்) -- 4,354

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com