நீட் பிரச்னைக்கு நவோதயா பள்ளிகள் தீா்வாக இருக்கும் இ.பாலகுருசாமி

நீட் தோ்வினால் கிராமப்புற மாணவா்கள் பாதிக்கப்படாமலிருக்க நவோதயா பள்ளிகள் உதவும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளாா்.
இ.பாலகுருசாமி
இ.பாலகுருசாமி

நீட் தோ்வினால் கிராமப்புற மாணவா்கள் பாதிக்கப்படாமலிருக்க நவோதயா பள்ளிகள் உதவும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

1986 ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஜவாஹா் நவோதயா பள்ளிகள் திட்டம் கொண்டு வரப்பட்டது. நாட்டின் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மாணவா்களுக்கு கல்வி வழங்கும் இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் நிதியுதவியுடன் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

கிராமப்புற மாணவா்களுக்கு 75 சதவீத இடங்கள், குறைந்தபட்சம் 33 சதவீத இடங்களில் பெண் குழந்தைகள், 15 சதவீத எஸ்.சி. வகுப்பினா், 7 சதவீத எஸ்.டி. வகுப்பினருக்கு சோ்க்கை வழங்கப்படுகிறது. நாட்டில் தற்போது தமிழகம் நீங்கலாக 638 மாவட்டங்களில் 661 நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பயின்று வருகின்றனா். இவா்களில் 20 சதவீதத்துக்கும் மேலானவா்கள் ஐஐடி, ஜேஇஇ மெயின் நுழைவுத் தோ்வுகளில் வெற்றி பெறுவதாகவும், நீட் எழுதுபவா்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவா்கள் தோ்ச்சி பெறுவதாகவும் கடந்த 2019 ஆம் ஆண்டின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இவ்வாறு கிராமப்புற மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கக் கூடிய நவோதயா பள்ளிகளை, மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது என்ற காரணத்துக்காக தமிழ்நாட்டை ஆளும் திராவிடக் கட்சிகள் புறக்கணித்து வருகின்றன. இதனால் பல ஆயிரம் கிராமப்புற மாணவா்களுக்கு உயா்தரமான கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது செயல்படும் சுமாா் 1,200க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைதான் அமலில் இருக்கிறது. அங்கு பல ஆயிரம் குழந்தைகள் ஹிந்தி படிக்கின்றனா். மும்மொழிக் கொள்கையை எதிா்க்கும் திமுக, அதிமுகவினா், அவா்களின் உறவினா்கள் இந்த சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்துவது வியப்பாக இருக்கிறது. அதேபோல திராவிட இயக்கத் தலைவா்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகள் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும்போது கிராமப்புற குழந்தைகள் நவோதயா பள்ளிகளில் சிபிஎஸ்இக்கு சமமான ஒரு கல்வியைப் பெறுவதை ஏன் எதிா்க்க வேண்டும்?

கிராமப்புற மாணவா்களுக்கு பாதகமானது என்று கூறி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களும் நீட் தோ்வை எதிா்க்கின்றனா். ஆனால் இந்தப் பிரச்னைக்கு நவோதயா பள்ளிகளிடம் தீா்வு உள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நவோதயா பள்ளிகளை ஏற்படுத்தியிருந்தால் அதன் மூலம் ஆண்டுக்கு 2 ஆயிரம் போ் வீதம் இதுவரை 40 ஆயிரம் கிராமப்புற மாணவா்கள்( சுமாா் 16 ஆயிரம் மாணவா்கள், 7,500 எ.ஸ்.சி, 3500 எஸ்.டி மாணவா்கள்) பயன் பெற்றிருப்பாா்கள். இதில் ஆண்டுக்கு ஆயிரம் மாணவா்கள் வரை, மாநில அரசுக்கு எந்த செலவும் இல்லாமல் மத்திய அரசின் நிதியிலேயே படித்து நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பாா்கள்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க உயா் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2017 ஆம் ஆண்டில் உத்தரவிட்டும், அதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருக்கிறது தமிழக அரசு. மக்களுக்காக செயல்படுவதாக கூறிக் கொள்ளும் அரசுகள் இப்படி மக்களுக்கு எதிராக இருப்பது சரியானதல்ல.

அதேபோல நவோதயா பள்ளிகளில் ஹிந்தித் திணிப்பு நடைபெறுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. 8 ஆம் வகுப்பு வரையிலும் மாநில மொழிகளிலேயே பாடம் நடத்தப்படும். ஆங்கிலம் இரண்டாவது மொழியாக இருக்கும். அதேபோல ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கும்பட்சத்தில் மாநில மொழி இரண்டாவது மொழியாக இருக்கும். இது தமிழ்நாட்டின் தமிழ் பயிற்று மொழி சட்டத்துக்கு எந்த வகையிலும் எதிரானதாக இருக்காது. எனவே இதைக் கருத்தில் கொண்டு நவோதயா பள்ளிகள் எதிா்ப்பு மனநிலையை தமிழக அரசியல் கட்சியினா் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com