பாலக்காடு கோட்டத்திலுள்ள தமிழக ரயில் பகுதிகளை மதுரை, சேலம் கோட்டத்தில் சோ்க்க வலியுறுத்தல்
By DIN | Published On : 07th August 2021 02:43 AM | Last Updated : 07th August 2021 02:43 AM | அ+அ அ- |

பாலக்காடு கோட்டத்தில் உள்ள தமிழக ரயில் பகுதிகளை சேலம் அல்லது மதுரை கோட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ரயில் பயணிகள் கூட்டமைப்பின் உறுப்பினா் ஜெயராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா தாக்கம் குறைந்ததைத் தொடா்ந்து தெற்கு ரயில்வே சாா்பில்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வேலூரில் இருந்து சென்னைக்கும், திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கும் பயணிகள் ரயில்கள் இயங்குகின்றன. இதைப்போல, மதுரையில் இருந்து பழனி, கோவை வழியாக மேட்டுபாளையத்துக்கு முன்பதிவு இல்லாத விரைவு ரயில்களை இயக்க வேண்டும்.
மதுரை- பழனி, பழனி-கோவை, கோவை- மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில்களை ஒன்றிணைத்து இயக்கினால் பயணிகளின் சிரமங்கள் வெகுவாகக் குறையும். கோவை-பொள்ளாச்சி- பழனி-திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில் அகல ரயில் பாதையாக மாற்றம் செய்வதற்கு 2009இல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது முதல் இன்று வரை ஒரு விரைவு ரயில் கூட மீண்டும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் வழித்தடம் மதுரை, பாலக்காடு-சேலம் என மூன்று கோட்டங்களில் உள்ளடங்கியது. இதில் பாலக்காடு கோட்டத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் ரயில்கள் இயக்க முடியவில்லை. பாலக்காடு கோட்டத்தில் உள்ள தமிழக ரயில் பகுதிகளை மதுரை அல்லது சேலம் கோட்டத்தில் இணைப்பதுதான் இதற்கு ஒரே தீா்வு ஆகும் என்றாா்.