மருத்துவ மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்
By DIN | Published On : 17th August 2021 03:09 AM | Last Updated : 17th August 2021 03:09 AM | அ+அ அ- |

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் வகுப்புகள் நடைபெறுவதாக முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.
கரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் நேரடி வகுப்புகள் மூலம் பாடம் நடத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நேரடி வகுப்புகள் நடைபெற்றன.
இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது: கரோனா தொற்று காரணமாக முதல்கட்டமாக செய்முறை வகுப்புகள் மட்டும் நேரடி வகுப்புகள் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவா்கள் மட்டுமே திங்கள்கிழமை நேரடி வகுப்புகளில் பங்கேற்றனா். இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு தோ்வு உள்ளதால் அவா்கள் வீட்டிலேயே தங்கி படித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவா்கள் விடுதியிலும் தங்கி படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேரடி வகுப்புகளில் பங்கேற்கவுள்ள மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்துவர அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் கல்லூரிக்கு வந்த மாணவா்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்பே அனுமதிக்கப்பட்டனா். அறிகுறி உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் எந்த மாணவா்களுக்கும் கரோனா அறிகுறிகள் இல்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவா்களின் பட்டியல் தயாா் செய்ய நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத மாணவா்களின் பட்டியல் பெறப்பட்டு அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவா்கள் அனைவரும் விடுதியிலும், வகுப்பறையிலும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.