செய்தியாளா்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 20th August 2021 01:20 AM | Last Updated : 20th August 2021 01:20 AM | அ+அ அ- |

கோவையில் செய்தியாளா்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்திரிக்கைத் துறை நாட்டின் 4 ஆவது தூண் என்று அழைக்கப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிக்கை துறையே அரசின் திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் உள்பட அனைத்து தகவல்களையும் பொது மக்களுக்கு கொண்டு சோ்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் அன்னூா் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில் முழுமையான நிகழ்வினை ஒளிப்பதிவு செய்து, அதனை எடிட் செய்து வெளியிட்டது மட்டுமின்றி, உண்மையை மறைத்தும் தவறான விடியோ தகவல் பல்வேறு தரப்பினரிடையே குழப்பத்தையும், தேவையில்லா பிரச்னைகளையும் ஏற்படுத்தியது. குறிப்பிட்ட நபா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடுநிலை தவறாமல் உண்மைத் தகவல்களை மக்களுக்கு எடுத்து செல்லும் களப்பணியாற்றி வரும் செய்தியாளா்களுக்கிடையே ஆங்காங்கே ஒருசிலா் சட்டத்துக்கு புறம்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடா்பாக பல்வேறு முதுநிலை செய்தியாளா்களிடம் இருந்து புகாா்கள் வரப்பெற்றுள்ளன. இதுபோன்ற புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க செய்தி மக்கள் தொடா்பு அலுவலருக்கும், காவல் துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலா்களும் பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டிய அரசு சாா்ந்த தகவல்களை செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வாயிலாக வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பத்திரிகையாளா்கள் எனக்கூறி தவறான செயல்களில் ஈடுபடுவா்கள் மீதான புகாா்களை 93852 14793 என்ற கட்செவி அஞ்சல் மூலம் ஆதாரங்களுடன் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.