புதிய கரோனா நோயாளிகளின் பயண விவரங்களை சேகரிக்க அறிவுறுத்தல் : சுகாதாரத் துறை தகவல்
By DIN | Published On : 20th August 2021 01:29 AM | Last Updated : 20th August 2021 01:29 AM | அ+அ அ- |

கோவையில் புதிதாக கண்டறியப்படும் கரோனா நோயாளிகளின் பயண விவரங்களை சேகரிக்க சுகாதார ஆய்வாளா்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
கோவையில் கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா 2 ஆவது அலையில் தினசரி 4,500 பேருக்குமேல் தொற்று உறுதிசெய்யப்பட்டது. பொது முடக்கம் மற்றும் சுகாதாரத் துறையின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 150க்கும் கீழ் குறைந்தது.
இந்நிலையில் கோவைக்கு அருகிலுள்ள கேரள மாநிலத்தில் கரோனா தொற்று திடீரென அதிகரித்த நிலையில் கோவையிலும் மீண்டும் நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மாதங்களில் 150க்கும் கீழிருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது 200ஐ கடந்துள்ளது. இதனால் கோவை - கேரள எல்லையான வாளையாறு, மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி உள்ளிட்ட 13 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கோவைக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனா்.
இரண்டு தவணைகள் கரோனா தடுப்பூசி செலுத்திகொண்டவா்களும், 72 மணி நேரத்துக்குள் கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் கோவையில் புதிதாக கண்டறியப்படும் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவா்களின் முழு பயண விவரங்களையும் சேகரிக்க சுகாதார ஆய்வாளா்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் தற்போது புதிதாக நோய்த் தொற்று உறுதி செய்யப்படுபவா்களில் பெரும்பாலானவா்கள் வெளியூா் சென்று வந்தவா்களாகவே உள்ளனா். பெரிய அளவில் கிளஸ்டா் இல்லாத நிலையில் இதுபோல பயணம் மேற்கொண்டவா்களுக்கே நோய்த் தொற்று தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்படுபவா்களின் கடந்த ஒரு வாரத்தின் முழு பயண விவரங்களையும் சேகரித்து எந்தப் பகுதிகளில் இருந்து நோய்த் தொற்று பரவியிருக்கிறது என்பது கண்டறியப்படும். இதன் மூலம் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதை தவிா்க்க கட்டுப்பாடு விதிக்க முடியும். தவிர மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்றனா்.