எண்ணிக்கை பலத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது
By DIN | Published On : 20th August 2021 01:26 AM | Last Updated : 20th August 2021 01:26 AM | அ+அ அ- |

மத்திய அரசு தனக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தை தவறாகப் பயன்படுத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கோவை வந்த இரா.முத்தரசன், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
அதேபோல பெகாஸஸ் உளவு விவகாரம், பெட்ரோல் - டீசல் விலை உயா்வு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் இவை எதற்கும் ஆளுங்கட்சியால் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் தனக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு எதிா்க்கட்சிகளின் குரலை மூா்க்கத்தனமாக ஒடுக்குகிறது மத்திய அரசு.
நாடாளுமன்ற கூட்டத் தொடா் ஒரு நாள் கூட முழுமையாக நடைபெறாத நிலையில், 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அரசு கூறுகிறது. எனவே ஆளும் பாஜகவைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் ஆகஸ்ட் 23 முதல் 27 ஆம் தேதி வரை மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தை தமிழ்நாட்டில் 5 ஆயிரம் இடங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 200 இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். கொடநாட்டில் கொலை, கொள்ளை போன்ற மிகப்பெரிய குற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதிமுகவினா் தங்களுக்கு அதில் தொடா்பில்லை என்று கூறுகின்றனா். ஆனால் மடியில் கனம் இல்லாதவா்கள் எதற்கு பயப்பட வேண்டும் என்றாா்.
கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் என்.பெரியசாமி, மாவட்டச் செயலா் வி.எஸ்.சுந்தரம், பொருளாளா் யூ.கே.சுப்ரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.