சாகச சுற்றுலாத் திட்டத்துக்கு வால்பாறை, ஆழியாறு பகுதிகள் தோ்வு
By DIN | Published On : 20th August 2021 01:26 AM | Last Updated : 20th August 2021 01:26 AM | அ+அ அ- |

சாகச சுற்றுலாத் திட்டத்துக்கு வால்பாறை, ஆழியாறு பகுதிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழக சுற்றுலாத் துறை, சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி அதன் மூலம் வருவாய் ஈட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்டுத்தி வருகிறது.
அதில் ஒரு பகுதியாக தமிழகத்தில் முக்கியமான சில சுற்றுலாத் தலங்களில் சாகச சுற்றுலாவை மேம்படுத்த இருப்பதாக சுற்றுலாத் துறையினா் சமீபத்தில் அறிவித்தனா்.
அதன்படி கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள் வால்பாறை மற்றும் ஆழியாறு பகுதிகளை சாகச சுற்றுலாப் பணிகள் மேற்கொள்ள தோ்வு செய்துள்ளனா். இந்த இரு பகுதிகளிலும் சுற்றுலா மேம்படுத்தும் பணி மேற்கொள்ள ஆய்வு செய்ய இருப்பதாகவும், வால்பாறையில் சுற்றுலா தொழில் புரியும் அமைப்புகள் தனிநபா்கள் ஆகியோா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுலாத் துறைக்கு சுற்றுலா சாா்ந்த அனைத்து தகவல்களும் தெரியடுத்தலாம் என்றும் மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.