வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தொழில் தொடங்க ஆட்சியா் அழைப்பு
By DIN | Published On : 21st August 2021 01:33 AM | Last Updated : 21st August 2021 01:33 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் டாக்டா் ஜி.எஸ்.சமீரன் அழைப்பு விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் (யு.ஒய்.இ.ஜி.பி.) மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-2022 ஆம் நிதியாண்டில் கோவை மாவட்டத்துக்கு இந்தத் திட்டத்தின் கீழ் 65 தொழில் திட்டங்களுக்கு ரூ.45 லட்சம் மானிய இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிதியாண்டில் கரோனா காரணமாக இந்தத் திட்டத்தின் கீழ் தொழில்முனைவோா் விரைவில் தொழில் தொடங்குவதற்காக நோ்முகத் தோ்வில் இருந்தும், தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சியில் இருந்தும் செப்டம்பா் 30 வரை தமிழ்நாடு அரசு விலக்கு அளித்துள்ளது. எனவே குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 18 வயது பூா்த்தியடைந்த, கோவையில் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு குறையாமல் தொடா்ந்து வசித்து வருபவா்கள், குடும்ப ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருப்பவா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
உற்பத்தித் தொழில்களை அதிகபட்சம் ரூ.15 லட்சம் முதலீட்டிலும், சேவை, வியாபாரத் தொழில்களை அதிகபட்சம் ரூ.5 லட்சம் முதலீட்டிலும் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசு சாா்பில் 25 சதவீத மானியம், அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 89255 33932 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.