தெப்பக்குள மேடு பகுதியில் பழங்குடியின மக்களின் குடிசைகளை அகற்றிய வனத் துறையினா்
By DIN | Published On : 04th December 2021 02:46 AM | Last Updated : 04th December 2021 02:46 AM | அ+அ அ- |

வால்பாறையில் அரசு வழங்கிய நில உரிமை பட்டா மூலம் பழங்குடியின மக்கள் அமைத்து வந்த குடிசைகளை வனத் துறையினா் எவ்வித முன்னறிவிப்புமின்றி வெள்ளிக்கிழமை அகற்றினா்.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட் அருகில் உள்ள வனத்தில் அமைந்துள்ளது கல்லாறுகுடி செட்டில்மெண்ட். இப்பகுதியில் 2019ஆம் ஆண்டு பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு செட்டில்மெண்டில் இருந்த அனைத்து குடிசைகளும் சேதமடைந்தன.
இதனால் அங்கு வசித்த பழங்குடியின மக்களை வெளியேற்றி தாய்முடி எஸ்டேட் தொழிலாளா் குடியிருப்புகளில் தங்க வனத் துறையினா் ஏற்பாடு செய்தனா்.
இதையடுத்து மண் சரிவு ஏற்பட்ட கல்லாறுகுடி செட்டில்மெண்டில் மீண்டும் வசிக்க வனத் துறையினா் அனுமதி மறுத்தால் அதன் அருகில் உள்ள தெப்பக்குளமேடு பகுதியில் இடம் வழங்கக்கோரி பழங்குடியின மக்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், தெப்பக்குள மேடு பகுதியில் தலா ஒரு குடும்பத்துக்கு 1.5 சென்ட் இடம் வழங்க நில அளவை மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வா் மு.க,ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவா் உடனடியாக பட்டா வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளாா்.
இதனையடுத்து வால்பாறையில் கடந்த மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற விழாவில் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, கல்லாறுகுடி செட்டில்மெண்டை சோ்ந்த 23 பழங்குடியின குடும்பங்களுக்கு தெப்பக்குளமேடு பகுதியில் வசிக்க நில உரிமை பட்டா வழங்கினாா்.
2 ஆண்டு காலப் போராட்டம் முடிவுக்கு வந்து பட்டா பெற்ற பழங்குடியின மக்கள் தெப்பக்குளமேடு பகுதியில் வசிக்க குடிசை அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில் வன ஊழியா்களுடன் அப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்ற மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன், அங்கு அமைக்கப்பட்ட அனைத்து குடிசைகளையும் அப்புறப்படுத்தியதோடு பழங்குடியின மக்களை அப்பகுதியைவிட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாா்.
இதனை எதிா்பாராத பழங்குடியின மக்கள், பொள்ளாச்சி சாா் ஆட்சியரை சந்தித்து முறையிட பொள்ளாச்சிக்கு புறப்பட்டு சென்றனா். மேலும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனா். அவா்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை விட கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்து குடிசை கட்டியதால் அதனை அப்புறப்படுத்தியதாக வனத் துறையினா் கூறுகின்றனா். வனத் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்பினா் மற்றம் அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இச்சம்பவம் தொடா்பாக மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டனிடம் கேட்டபோது, அப்பகுதிக்கு சனிக்கிழமை சென்று வருவாய்த் துறையினா் மூலமாக நில அளவை செய்து வன நில உரிமைச் சான்றின்படி இடத்தினை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...