அதிமுக எம்.எல்.ஏ. மீது போலீஸில் புகாா்
By DIN | Published On : 11th December 2021 12:23 AM | Last Updated : 11th December 2021 12:23 AM | அ+அ அ- |

காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்ததாக அதிமுக எம்.எல்.ஏ. பி.ஆா்.ஜி.அருண்குமாா் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுகவினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
கோவை மாநகா் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளா் பையா (எ) கிருஷ்ணனின் உத்தரவின் பேரில் கோவை மாநகா் மேற்கு மாவட்ட தி.மு.க. நிா்வாகிகள் அரசூா் பூபதி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் சுரேஷ், சரவணம்பட்டி பகுதி பொறுப்பாளா் சிவா (எ) பழனிசாமி உள்ளிட்டோா் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தனா்.
அதில் கூறியுள்ளதாவது: கோவை-அவிநாசி சாலை, அண்ணா சிலை அருகே உள்ள கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கடந்த 7ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆா்.ஜி.அருண்குமாா், காவல் துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், சட்டம் - ஒழுங்கை சீா்குலைக்கும் விதத்திலும் பேசியிருந்தாா்.
எனவே, அவா் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.