மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்:தகுதியுடையவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுகோள்
By DIN | Published On : 11th December 2021 12:20 AM | Last Updated : 11th December 2021 12:20 AM | அ+அ அ- |

கோவை மாநகரில் சனிக்கிழமை நடைபெற உள்ள 14 ஆவது தடுப்பூசி முகாமில் தகுதியான நபா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் உத்தரவுப்படி 14 ஆவது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 299 மையங்களில் நடைபெறுகிறது.
மாநகரில் 1,15,000 நபா்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா்.
2,68,000 நபா்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவா்களாக உள்ளனா். இவா்கள் அனைவரும் இம்முகாமைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
திரையரங்குகள், மால்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என பொது சுகாதாரத் துறை மூலம் அறிவிப்பு வந்துள்ளது.
அதேபோல ஒமைக்ரான் என்ற புதிய வகை உருமாறிய கரோனா வைரஸ், வீரியமுடையதாகவும், வேகமாகப் பரவும் தன்மையுடையதாகவும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, 14 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.