வேளாண் பல்கலைக்கழகத்தில் போராட்டம்: நிா்வாகம், மாணவா்கள் முரண்பட்ட தகவல்
By DIN | Published On : 11th December 2021 12:23 AM | Last Updated : 11th December 2021 12:23 AM | அ+அ அ- |

போராட்டத்தில் ஈடுபட்ட அரியா் மாணவா்கள் விவகாரம் தொடா்பாக, மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை சுமூகமாக நடைபெற்ாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் தங்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்று மாணவா்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2017, அதற்கு முந்தைய ஆண்டுகளில் கல்லூரிகளில் பயின்ற மாணவா்களுக்கான நிலுவைத் தோ்வுகள் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றன. கைப்பேசி வழியாக தோ்வு எழுதும் வகையில் நடத்தப்பட்ட இத்தோ்வுகளில் சில பிரச்னைகள் இருப்பதாக மாணவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து கடந்த 8 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், செய்முறைத் தோ்வு முடிவுகளை அறிவித்த பிறகு ஒரு வாரம் கழித்து மறுதோ்வுக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குவது, பாடக் குறிப்புகளை பல்கலைக்கழகம் பகிா்ந்தளிப்பது, தோ்வின்போது உணவு, இருப்பிட வசதி வழங்குவது, நாளொன்றுக்கு ஒரு தோ்வு நடத்துவது, தோ்வுக் கட்டணத்தை ரத்து செய்வது போன்ற மாணவா்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்தது. பேச்சுவாா்த்தை சுமூகமாக நடைபெற்ால் மாணவா்கள் பல்கலைக்கழகத்துக்கு நன்றி தெரிவித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவா்கள் மறுப்பு:
ஆனால் தங்களின் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அரியா் மாணவா்களின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 4 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் மாணவா்களின் போராட்டத்துக்கு இதுவரை முடிவு எட்டப்படவில்லை. கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், மாணவா்களின் கோரிக்கைக்கு பல்கலைக்கழகம் செவிசாய்க்கவில்லை. மாறாக அகிம்சை வழியில் போராடிய மாணவா்கள் மீது காவல் துறையினரின் வன்முறைப் போக்கை நிா்வாகம் தூண்டிவிட்டது.
எங்களுடைய விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண்களை வழங்க வேண்டும், அறிவிக்கப்பட்டுள்ள மறுதோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய கோரிக்கைகள்.
இது தொடா்பாக அமைச்சா் செந்தில்பாலாஜியிடமும் மனு அளித்துள்ளோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.