மாற்றுத் திறனாளிகள் தேவைகள் குறித்து இன்று முதல் வீடுவீடாக கணக்கெடுப்பு : அமைச்சா் செந்தில்பாலாஜி
By DIN | Published On : 11th December 2021 12:21 AM | Last Updated : 11th December 2021 12:21 AM | அ+அ அ- |

மாற்றுத் திறனாளிகள் தேவைகள் குறித்து வீடுவீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை முதல் துவக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 71 நபா்களுக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் 23 பயனாளிகளுக்கு ரூ.2.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் செந்தில்பாலாஜி வழங்கினாா்.
இதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்ட நிா்வாகமும், வீ ஆா் யுவா் வாய்ஸ் மற்றும் யுனைடெட் எஜிகேஷனல் டிரஸ்ட் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 163 மாற்றுத் திறனாளிகளில் முதல்கட்டமாக தோ்ச்சிபெற்ற 71 நபா்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டம் முழுவதும், வீடுகள்தோறும் மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் குறித்து கணக்கெடுப்புப் பணிகள் சனிக்கிழமை (டிசம்பா் 11) முதல் தொடங்குகின்றன.
இந்தக் கணக்கெடுப்புப் பணியின்போது, மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு, தொழில் கடன், இலவச வீடுகள், கல்வி உதவித் தொகை, உபகரணங்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் சாா்ந்த தேவைகள் குறித்து தெரிவிக்கலாம்.
மாவட்ட நிா்வாகத்தின் மூலம் விரைவில் உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கோவை மாவட்டம் முழுவதும் 150 இடங்களில் ‘மக்கள் சபை‘ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் 1 லட்சத்து 41 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
முறையாக விண்ணப்பித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதல்வா் மூலம் 25 ஆயிரத்து 514 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. மற்ற தகுதியான மனுக்கள் அந்தந்த துறைக்கு அனுப்பப்பட்டு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வசந்தராம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.