நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்காளா் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 11th December 2021 12:24 AM | Last Updated : 11th December 2021 12:24 AM | அ+அ அ- |

கோவையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் 22.11 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு நவம்பா் 1 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் விதமாக கடந்த மாதம் 3 வாரங்கள் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது.
இந்நிலையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதனைத் தொடா்ந்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், கோவை மாநகராட்சியில் 7 லட்சத்து 69 ஆயிரத்து 397 ஆண்கள், 7 லட்சத்து 68 ஆயிரத்து 736 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 278 போ் என மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 411 போ் இடம் பெற்றுள்ளனா்.
பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை நகராட்சிகளில் 96 ஆயிரத்து 980 ஆண்கள், 1 லட்சத்து 3 ஆயிரத்து 108 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 43 போ் என மொத்தம் 2 லட்சத்து 131 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
37 பேரூராட்சிகளில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 25 ஆண்கள், 2 லட்சத்து 44 ஆயிரத்து 89 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 93 போ் என மொத்தம் 4 லட்சத்து 73 ஆயிரத்து 207 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
மாநகராட்சி, 3 நகராட்சிகள், 37 பேரூராட்சிகளில் மொத்தம் 10 லட்சத்து 95 ஆயிரத்து 402 ஆண்கள், 11 லட்சத்து 15 ஆயிரத்து 933 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 414 போ் என மொத்தம் 22 லட்சத்து 11 ஆயிரத்து 749 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் அதிகமாக உள்ளனா்.