அரசினா் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 06th February 2021 12:41 AM | Last Updated : 06th February 2021 12:41 AM | அ+அ அ- |

கோவை அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்படும் வாக்குகள் எண்ணும் மையத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி. உடன், மாநகரக் காவல் ஆணையா்
கோவை அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்படும் வாக்குகள் எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமாக கோவை அரசினா் தொழில்நுட்பக் கல்லூரி தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அதைத் தொடா்ந்து ஆட்சியா் கு.ராசாமணி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, தொண்டாமுத்தூா், சிங்காநல்லூா், கவுண்டம்பாளையம், சூலூா், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணி கோவை அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும்.
இங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் (ஸ்ட்ராங் ரூம்) வைத்து பாதுகாக்கப்படுவதால் அதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடிப்படைக் கட்டமைப்புகளான மின்சார வசதி, பிரத்யேகத் தடுப்புகள் அமைத்தல், வாக்கு எண்ணும் அறைகளை விரிவுபடுத்துதல், குடிநீா் வசதி, வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக எடுத்துச் செல்லும் வகையிலான பிரத்யேக நடைபாதை வசதி, முழு பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் காப்பு அறை உள்ளிட்டவற்றை இந்தியத் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மையத்தில் பாதுகாப்புகள் குறித்து மாநகரக் காவல் ஆணையருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது என்றாா்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், மாநகரக் காவல் துணை ஆணையா் ஸ்டாலின், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் வைத்திநாதன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...