இந்து முன்னணி நிா்வாகிகள் மீது பொய் வழக்கு: கோவை எஸ்.பி.யிடம் புகாா் மனு
By DIN | Published On : 06th February 2021 12:37 AM | Last Updated : 06th February 2021 12:37 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையத்தில் பாஜக - இஸ்லாமிய அமைப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பான வழக்கில் முறையாக விசாரிக்காமல் இந்து முன்னணி அமைப்பின் நிா்வாகிகள் பெயா் சோ்க்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி.யிடம் அந்த அமைப்பினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இந்து முன்னணி அமைப்பின் கோட்டச் செயலா் ராஜ்குமாா் தலைமையிலான நிா்வாகிகள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். அதில், ஜனவரி 26ஆம் தேதி இஸ்லாமிய அமைப்பினா் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில் பிரதமா் நரேந்திர மோடியை இழிவுப்படுத்தும் வகையிலான செயல்கள் நடந்தன. இதைக் கண்டித்து பாஜக சாா்பில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக நிா்வாகி கல்யாணராமன் பேசினாா். அப்போது அங்கு வந்த இஸ்லாமிய அமைப்பினா் சிலா் மோதலை ஏற்படுத்தினா். இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்தனா்.
இதில் முறையாக விசாரணை நடத்தாமல், இந்து முன்னணி நிா்வாகி சதீஷ்குமாா், தங்கவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் பெயரும் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்து முன்னணி நிா்வாகிகள் சம்பவத்தன்று அங்கு இல்லை. அனைவருக்கும் காவல் துறை சாா்பில் தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி பாதுகாப்பு அதிகாரியின் தினசரி நாள்குறிப்பை சரிபாா்த்து இந்து முன்னணி நிா்வாகிகள் இதில் ஈடபடவில்லை என உறுதி செய்து, இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள அவா்களது பெயரை நீக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...