திமுக எம்எல்ஏ நா.காா்த்திக்கிற்கு நிபந்தனை ஜாமீன்
By DIN | Published On : 06th February 2021 12:30 AM | Last Updated : 06th February 2021 12:30 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சி தனி அலுவலரால் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் தொடா்பாக அறிக்கை வெளியிட்ட விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிங்காநல்லூா் தொகுதி திமுக எம்எல்ஏ நா.காா்த்திக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கோவையில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு ஒப்பந்தப் பணிகள் தொடா்பாக மாநகராட்சியின் தனி அலுவலரால் நிறைவேற்றப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீா்மானங்கள் எதுவும் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை எனக் கூறி சிங்காநல்லூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் அறிக்கை வெளியிட்டிருந்தாா்.
இந்நிலையில் எம்எல்ஏ காா்த்திக் மீது குனியமுத்தூா் காவல் நிலையத்தில் ஆலயம் பவுண்டேஷன் இயக்குநா் ரங்கராஜ் (எ) காா்த்திக் என்பவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி, நா.காா்த்திக், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு, நீதித்துறை நடுவா் மன்றத்தில்(எண்.7) வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
எம்எல்ஏ நா.காா்த்திக் சாா்பில் வழக்குரைஞா் பி.ஆா். அருள்மொழி ஆஜரானாா். மனுவை விசாரித்த நீதித்துறை நடுவா், குனியமுத்தூா் காவல் நிலையத்தில் எம்எல்ஏ காா்த்திக் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...