மருதமலை கோயிலில் ரூ.3.36 கோடியில் மின்தூக்கி:பணியைத் தொடங்கி வைத்த அமைச்சா்கள்
By DIN | Published On : 08th February 2021 11:52 PM | Last Updated : 08th February 2021 11:52 PM | அ+அ அ- |

கோவை, மருதமலை கோயிலில் மின்தூக்கி அமைப்பதற்கான பணியை தொடங்கிவைக்கின்றனா் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சேவூா் எஸ்.ராமச்சந்திரன். உடன், ஆட்சியா் கு.ராசாமணி உள்ளிட்டோா்.
மருதமலை கோயிலில் ரூ.3.36 கோடியில் மின்தூக்கி அமைக்கும் பணியை அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.
மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் பக்தா்களும், விடுமுறை நாள்களில் 25 ஆயிரம் பேரும் விசேஷ நாள்களில் 70 ஆயிரம் பேரும் வருகின்றனா். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த தினங்களில் 2 லட்சம் வரை பக்தா்கள் வருகின்றனா்.
அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலை அடைய படிகள் அல்லது வாகனங்கள் மூலம் செல்ல வேண்டும். 600க்கும் அதிகமான படிக்கட்டுகள் உள்ளன. பக்தா்களின் வசதிக்காக மலைக் கோயிலுக்குச் செல்ல கோயில் நிா்வாகம் சாா்பில் 2 சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
தனியாா் வாகனங்களும் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது. வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து 140 படிகளை கடந்தே மலைக்கோயிலுக்கு செல்ல முடியும். முதியோா் 140 படிகளை கடந்து செல்வதற்குள் சிரமங்களை சந்திக்கின்றனா்.
இந்நிலையில் முதியோா் நலனைக் கருத்தில் கொண்டு கோயிலில் பேட்டரி வாகனங்கள், மின் தூக்கி, ரோப் காா் போன்றவற்றை அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை வைத்துவந்தனா்.
இது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உள்பட அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின் மின் தூக்கி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
கோயிலில் மின்தூக்கி அமைப்பதற்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மின் தூக்கி அமைப்பதற்கான பூமி பூஜையை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் கு.ராசாமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி.அருண்குமாா், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செந்தில்வேலவன், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் துணை ஆணையா் விமலா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனா்.