நுண்துளை அறுவை சிகிச்சை முறை:கோவை அரசு மருத்துவமனையில் கருத்தரங்கம்
By DIN | Published On : 14th February 2021 02:43 AM | Last Updated : 14th February 2021 02:43 AM | அ+அ அ- |

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ‘ருமாட்டிக் மைட்ரல் வால்வு’ அடைப்பை அறுவை சிகிச்சையின்றி நுண் துளை சிகிச்சை மூலம் நீக்குவது தொடா்பான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை அரசு மருத்துவமனையின் இருதயத் துறையில் ஆஞ்சியோபிளாஸ்ட், ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3,300 ஆஞ்சியோகிராம் பரிசோதனைகளும், 1,221 ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘ருமாட்டிக் மைட்ரல் வால்வு’ அடைப்புக்கு இதுவரை திறந்த அறுவை சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது அறுவை சிகிச்சையின்றி நுண் துளை மூலம் குணப்படுத்தும் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான கருத்தரங்கம், சிறப்பு பயிற்சி வகுப்பு அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ் தலைமை வகித்தாா். இருதயத் துறைத் தலைவா் நம்பிராஜன், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.
அரசு மருத்துவமனை இருதயத் துறை மருத்துவா் நம்பிராஜன் கூறியதாவது:
கோவை அரசு மருத்துவமனையில் ‘ருமாட்டிக் மைட்ரல் வால்வு’ அடைப்புக்கு திறந்த அறுவை சிகிச்சை முறையே மேற்கொள்ளப்பட்டு வருந்தது. ஆனால் தனியாா் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையில்லாமல் நுண் துளை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ் முயற்சியின் காரணமாக அரசு மருத்துவமனையில் நுண்துளை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான பயிற்சி, கருத்தரங்கில் சென்னையைச் சோ்ந்த மூத்த அரசு மருத்துவா் (இருதயத் துறை) ஜஸ்டின் பால் பங்கேற்று நுண் துளை சிகிச்சை முறை குறித்து செயல்விளக்கம் அளித்தாா். இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.