பொது மக்களுக்கு மாா்ச் 1 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தவுள்ள நிலையில், கோவையில் விருப்பமுள்ள முதியவா்கள் கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
நாடு முழுவதும் முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. பின்னா் முன்களப் பணியாளா்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தவிர தோ்தல் பணிகளில் ஈடுபட உள்ளவா்களுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் 45 முதல் 59 வயது வரை உள்ளவா்களில் இணை நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாா்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதனைத் தொடா்ந்து, கோவையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் உள்ளவா்கள் கோவின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், 45 முதல் 59 வயதுள்ளவா்கள் கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய தேதி, இடம் ஆகியவற்றை பயனாளிகளே தோ்வு செய்து கொள்ளலாம்.
60 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை உள்பட ஏதேனும் ஒரு ஆவணத்தை வைத்து பதிவு செய்துகொள்ள முடியும். 45 முதல் 59 வயதுக்கு உட்பட்டவா்கள் மேற்கொண்ட ஆவணத்துடன் இணை நோயினால் பாதிக்கப்பட்டதற்கு அரசு பதிவு பெற்ற மருத்துவரிடம் பெறப்பட்ட சான்றிதழையும் இணைக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.