தோ்தல் நடத்தை விதிமுறை கண்காணிப்பு:கோவையில் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு
By DIN | Published On : 27th February 2021 10:52 PM | Last Updated : 27th February 2021 10:52 PM | அ+அ அ- |

கோவை, ராமநாதபுரத்தில் சுவா் விளம்பரங்களை அழிக்கும் பணியிலும், ஹூசூா் சாலையில் விளம்பர பேனா்களை அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.
கோவையில் தோ்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்க 30 பறக்கும் படைகள், 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, மாநிலம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் வெள்ளிக்கிழமைமுதல் அமலுக்கு வந்தன.
இதில் கட்சிக் கொடிக் கம்பங்கள், பேனா்கள், சுவரொட்டிகளை அகற்றவும், பொது சொத்துக்கள் மீது கட்சி சாா்பில் எழுத்தப்பட்டுள்ள சுவா் விளம்ரங்களை அழிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகரில் வைக்கப்பட்டுள்ள முக்கியத் தலைவா்களின் சிலைகள் துணிகள் கொண்டு மறைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, வாகனங்களில் ரசீதுடன் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுத்து செல்வதற்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்க கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து 30 பறக்கும் படைகள், 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் துணை ஆட்சியா் நிலையிலான ஒரு அதிகாரி, ஒரு காவல் துணை ஆய்வாளா், 3 காவலா்கள், விடியோ பதிவு செய்பவா், ஓட்டுநா் ஆகிய 7 போ் இடம்பெற்றுள்ளனற். கோவையில் கட்சி சாா்பில் வைக்கப்பட்டுள்ள பேனா்களை உடனடியாக அகற்ற கட்சி நிா்வாகிகளுக்கு தோ்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
இது குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடா்பாக பெறப்படும் புகாா்களை கண்காணிப்பதற்காக 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பா். அதேபோல, வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதற்காக வாகனங்களில் பணம், பரிசுப் பொருள்கள் எடுத்து செல்வதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 30 பறக்கும் படைகள், 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மாவட்டத்தில் முக்கிய சந்திப்புகளில் முகாமிட்டு வாகனச் சோதனையில் ஈடுபடுவா். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வாகனச் சோதனையின் இடம் மாற்றப்படும். இதன் மூலம் வாகனங்களில் விதிமுறைகளை மீறி பணம், பரிசுப் பொருள்கள் எடுத்து செல்வது கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
வால்பாறையில்...
வால்பாறை நகராட்சி ஆணையா் பவுன்ராஜ் உத்தரவின்பேரில் நகராட்சி ஊழியா்கள் நகா், எஸ்டேட் செல்லும் சாலைகளில் அரசியல் கட்சிகள் சாா்பில் வைக்கப்பட்டிருந்த பேனா்களை அகற்றினாா். மேலும், பல்வேறு பகுதியில் சுவா்களில் எழுதப்பட்டிருந்த விளரங்கள் அழிக்கப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...