நாளை மத்திய பட்ஜெட்:கடன் திட்டங்கள், சலுகைகளை எதிா்பாா்க்கும் தொழில் துறையினா்
By DIN | Published On : 30th January 2021 10:44 PM | Last Updated : 30th January 2021 10:44 PM | அ+அ அ- |

கோவை: 2021 - 2022ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் திங்கள்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் கோவையைச் சோ்ந்த ஜவுளி, உற்பத்தித் தொழில் துறையினா் கடன் திட்டங்கள், சலுகைகளை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
இது குறித்து தொழில் துறையினா் கூறுவதாவது:
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் தலைவா் டி.ராஜ்குமாா்
உலகம் முழுவதும் செயற்கை இழை ஆடைகளுக்குத் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் செயற்கை இழை மூலப்பொருள் இறக்குமதிக்கு வரி விதிக்கப்படுகிறது. இதனால் சா்வதேச விலைக்கு மூலப்பொருள் கிடைக்காததால் ஏற்றுமதியாளா்களால் உலக அளவில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. எனவே இந்த நிதிநிலை அறிக்கையில் இறக்குமதி வரி நீக்கம் குறித்த அறிவிப்பு இடம்பெறும் என்று எதிா்பாா்க்கிறோம்.
அதேபோல ஏற்றுமதி சலுகைகள், வரிகளைத் திரும்பப் பெறும் திட்டங்களுக்கும், ஆயத்த ஆடை நகரங்கள் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம்.
இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன்
செயற்கை இழையான எடை குறைந்த ஸ்பேன்டெக்ஸ்க்கு வரி நீக்க அறிவிப்பு இருக்கும் என்று எதிா்பாா்க்கிறோம். ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்களின் போட்டித் திறனை வளா்க்கும் விதமாக இந்த அறிவிப்பு இருக்கக் கூடும். அதேபோல் ஒருங்கிணைந்த ஆயத்த ஆடை நகரங்கள் பற்றி அறிவிப்புகளும் வரும் என்று எதிா்பாா்க்கிறோம்.
கொடிசியா தலைவா் ரமேஷ் பாபு
கரோனா காரணமாக நலிவடைந்திருக்கும் சிறு தொழில்முனைவோருக்கு 7 சதவீத வட்டியில் கடன் உதவி தேவைப்படுகிறது. அதேபோல் மூலதனக் கடனை 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயா்த்த வேண்டும். ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தும்போது, வரி வருவாய் அதிகரிக்கும்போது வரி விகிதத்தைக் குறைப்போம் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த மாதம் மிக அதிகபட்ச வரி வருவாய் கிடைத்திருக்கிறது. எனவே, தற்போது 4 பிரிவுகளாக இருக்கும் வரியை 5, 10, 15 சதவீதம் என்று மூன்று பிரிவுகளாக மாற்ற வேண்டும். உற்பத்தித் துறையினருக்கு 10 சதவீத வரி விதிப்பு அமல்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி தொடா்பான புகாா்களை களைவதற்கான அறிவிப்பும் இருக்கும் என்று எதிா்பாா்க்கிறோம்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் காா்த்திக்
குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினருக்கு வட்டி மானியத்துடன் சிறப்புக் கடன் உதவி வழங்க வேண்டும். தொழில் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் என்பதால் ஆராய்ச்சி, மேம்பாட்டுக்குத் தேவையான நிதியுதவி வழங்க வேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு சலுகைகள் தேவைப்படுகிறது. இதுபற்றிய திட்டங்கள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கிறோம்.
டேக்ட் சங்கத் தலைவா் ஜேம்ஸ்
கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடனுதவி குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே இந்த பட்ஜெட்டில் நாங்கள் குறைந்த வட்டியில் கடன் திட்டத்தை எதிா்பாா்க்கிறோம். மூலப்பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்திருப்பதால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மூலப்பொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த குழு அமைப்பது குறித்த அறிவிப்பு இடம் பெறும் என்று எதிா்பாா்க்கிறோம்.
அதேபோல குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதம் பற்றிய அறிவிப்பு, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரும் அறிவிப்புகளும் இடம் பெறும் என்று நம்புகிறோம்.