விரைவுத் தபால் சேவையில் சாதனை: கோவை அஞ்சல் அதிகாரி கௌரவிப்பு
By DIN | Published On : 07th July 2021 06:48 AM | Last Updated : 07th July 2021 06:48 AM | அ+அ அ- |

அஞ்சல் அதிகாரி விக்னேஷுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கே.கோபாலன்.
கோவை கோட்டத்தில் 2020- 2021இல் 24, 294 விரைவுத் தபால்களைப் பதிவு செய்துள்ள அஞ்சல் அதிகாரியை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் கே.கோபாலன் செவ்வாய்க்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.
மேற்கு மண்டல அஞ்சல் துறைக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அஞ்சல் துறையில் உள்ள செல்வமகள் சேமிப்புத் திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு, விரைவுத்தபால் சேவை, கிராமிய அஞ்சல் காப்பீடு உள்ளிட்ட பணிகளை 2020 -2021 ஆம் ஆண்டில் சிறப்பாக மேற்கொண்ட அஞ்சல் ஊழியா்கள் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு, அந்தந்த மாவட்டங்களின் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா்கள் சான்றிதழ்களை வழங்கினா்.
மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட 70 பேரில், கோவை காந்திபுரம் மத்திய அஞ்சல் நிலைய அதிகாரி என்.விக்னேஷ், கோவை கோட்டத்தில் சிறந்த அஞ்சல் பணியாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
இவா், 2020 - 2021 ஆண்டில், 24 ஆயிரத்து 294 விரைவுத் தபால்களைப் பதிவு செய்து அனுப்பி சாதனை செய்துள்ளதாக அஞ்சல் அதிகாரிகள் தெரிவித்தனா். என்.விக்னேஷுக்கு, கோவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் கே.கோபாலன் கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கெளரவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...