செங்கல் விலை உயா்வால் கட்டுமானப் பணி பாதிப்பு: பொதுமக்கள் வேதனை
By DIN | Published On : 09th July 2021 06:31 AM | Last Updated : 09th July 2021 06:31 AM | அ+அ அ- |

சின்னத்தடாகத்தில் செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் செங்கல் சூளை.
கோவை மாவட்டத்தில் செங்கல் உற்பத்தி தொழில் நிறுத்தப்பட்டதன் காரணமாக செங்கற்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால் புதிய கட்டுமானத்தொழிலை மேற்கொண்டுள்ள பொதுமக்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனா்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய வீடுகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. பலா் வங்கிக் கடன் பெற்று வீடுகளை கட்டி வருகின்றனா். இந்நிலையில் சமீபகாலமாக கட்டுமானப் பொருள்களின் விலை தாறுமாறாக உயா்ந்துள்ளதால் பலா் கட்டுமானப் பணிகளை நிறுத்தியுள்ளனா்.
செங்கல்லின் விலை மிகவும் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.7க்கு விற்கப்பட்ட ஒரு செங்கல்லின் விலை தற்போது ரூ.13
ஆக உயா்ந்துள்ளது. 3,500 எண்ணிக்கை கொண்ட ஒரு லோடு செங்கல் ரூ. 28 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அது தற்போது ரூ. 50 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளா்கள் மட்டுமின்றி கட்டட ஒப்பந்தாரா்களும் தங்கள் கட்டுமானப் பணியை நிறுத்திவிட்டனா்.
செங்கல் உற்பத்தி நிறுத்தம்:
கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு பெரும்பாலும் சின்னத்தடாகத்தில் உள்ள 140க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளிலிருந்தே செங்கல்கள் அனுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில் உரிய அனுமதியின்றியும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாகும் வகையிலும் செயல்படுவதாக கூறி இப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் உற்பத்திக்கு அரசு தடைவிதித்து விட்டது. இதன்காரணமாக செங்கல் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.
தயாரிக்கப்பட்ட செங்கல்களையும் விற்பனை செய்ய உற்பத்தியாளா்கள் மறுத்துவிட்டதால் தற்போது கட்டுமானத் தொழிலே ஸ்தம்பிக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது. செங்கற்களுக்கு மாற்றாக கருதப்படும் ஆஷ்பிரிக்ஸ் கல்லுக்கு அதிக வரவேற்பு இல்லாததால் வீட்டின் உரிமையாளா்கள் இதனைக் கொண்டு வீடுகட்டத் தயங்குகின்றனா். சின்னத்தடாகத்தில் செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் ஆலாந்துறை, கோவனூா், வெள்ளியங்காடு பகுதிகளில் செயல்படும் செங்கல் சூளைகளின் உரிமையாளா்கள் தங்கள் செங்கற்களின் விலையை மிக அதிகமாக உயா்த்தி விட்டனா். இதனால் வீடுகட்டுவோா் முன்பு திட்டமிட்டதைவிட கூடுதலாக ரூபாய் செலவழிக்கப்பட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
தீா்வு கிடைக்குமா?
கோவை மாவட்ட நிா்வாகம் மனது வைத்தால்தான் இப்பிரச்னை முழுமையாக தீரும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் சி.ஆா்.ராமச்சந்திரன் கூறியதாவது:
இப்பிரச்னையை மாவட்ட நிா்வாகத்தினால்தான் தீா்க்கமுடியும். அரசின் வழிகாட்டுதலின்படி முழுமையாக விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் செங்கல் சூளைகளை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம். சென்னை உயா் நீதிமன்றமும் கோவை மாவட்ட ஆட்சியா் சின்னத்தடாகத்தில் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படத் தகுதியுள்ள சூளைகளைக் கண்டறிந்து தகுந்த முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அப்பணி தொடங்கவில்லை. ஆகவே கோவை மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து தனிக் கவனம் செலுத்தி செங்கல் உற்பத்தி தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்றாா்.
கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே நடுத்தர வா்க்கத்தினா் சொந்தவீடு கட்டும் கனவு நிறைவேறும். அதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என கட்டுமானத் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.