பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அருளானந்தம் ஜாமீன் மனு தள்ளுபடி
By DIN | Published On : 09th July 2021 01:26 AM | Last Updated : 09th July 2021 01:26 AM | அ+அ அ- |

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை கோவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சபரி ராஜன், திருநாவுக்கரசு உள்பட 5 போ் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சியைச் சோ்ந்த பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் (34) ஹேரன்பால் (29) பாபு (27) ஆகிய மூன்று பேரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட இந்த 3 பேரும் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் ஜாமீன் கோரி கோவை மகளிா் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் அருளானந்தம் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.