பேரூராட்சிகளில் கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: ஆட்சியா்
By DIN | Published On : 09th July 2021 01:27 AM | Last Updated : 09th July 2021 01:27 AM | அ+அ அ- |

கோவையில் உள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.
பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியா் பேசியதாவது:
பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி கோவையிலுள்ள 37 பேரூராட்சிகளிலும் சுகாதாரமான குடிநீா் வழங்குதல், மழைநீா் வடிகால் அமைத்தல், சாலை வசதிகள், தெரு விளக்குகள் அமைத்தல், தனிநபா்கள் இல்லக் கழிப்பிடம் கட்டுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்.
கோவையில் கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. வரும் நாள்களில் தொற்றுப் பாதிப்பே இல்லாத வகையில் பேரூராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொண்டு கரோனா பாதிக்கப்பட்டவா்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.