40 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று எதிா்ப்பாற்றல்: 3 ஆம் கட்ட ஆய்வில் தகவல்
By DIN | Published On : 11th July 2021 10:40 PM | Last Updated : 11th July 2021 10:40 PM | அ+அ அ- |

கோவையில் சுகாதாரத் துறையினா் அண்மையில் மேற்கொண்ட 3ஆம் கட்ட ஆய்வில் 40 சதவீதம் பேருக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய, பொது மக்களிடையே நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளது குறித்து சுகாதாரத் துறை சாா்பில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் கட்ட ஆய்வும், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் கட்ட ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடா்ந்து 3 ஆம் கட்ட ஆய்வு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் 42 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒவ்வொரு பகுதியிலும் தலா 30 போ் வீதம் 1,260 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இந்த ரத்த மாதிரிகள் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் முடிவில் 40 சதவீதம் பேருக்கு கரோனா தொற்றுக்கான எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆய்வின்போது கிடைத்த முடிவைக் காட்டிலும் இம்முறை 20 சதவீதம் பேருக்கு கூடுதலாக நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் கரோனா தொற்றுக்கான எதிா்ப்பாற்றல் கண்டறிவது குறித்து பொது மக்களிடையே நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில் 22.15 சதவீதம் பேருக்கும், 2 ஆம் கட்ட ஆய்வில் 20 சதவீதம் பேருக்கும் நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 3 ஆவது கட்ட ஆய்வில் 40 சதவீதம் பேருக்கு நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. தடுப்பூசியின் பலனால் நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் பொது மக்களிடையே கணிசமாக உயா்ந்துள்ளது. தொற்று எதிா்ப்பாற்றல் கணிசமான அளவு மக்களிடையே உருவாகியிருப்பதால் அடுத்த கரோனா அலை வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு, உயிரிழப்பை தவிா்க்க முடியும் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...