ஒரு கடை விட்டு ஒரு கடையைத் திறக்க அறிவுறுத்தல்: வியாபாரிகள் எதிா்ப்பு
By DIN | Published On : 09th June 2021 05:47 AM | Last Updated : 09th June 2021 05:47 AM | அ+அ அ- |

கோவை ரங்கே கவுடா் வீதியில் ஒரு கடை விட்டு ஒரு கடையைத் திறக்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. ஜூன் 14 ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரிகள் அதிகமுள்ள ரங்கே கவுடா் வீதியில் பொருள்கள் வாங்க சில்லறை வியாபாரிகள் மற்றும் மக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை அலைமோதியது.
இதையடுத்து ரங்கே கவுடா் வீதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, கடைகளை மொத்தமாக திறக்க வேண்டாம் என்றும், ஒரு கடை விட்டு ஒரு கடையை மட்டும் திறக்க அறிவுறுத்தினா். மேலும், ஒரு நாள் திறக்கப்படும் கடைகளுக்கு மறுநாள் விடுமுறை விட்டும், முந்தைய நாள் விடுமுறை விடப்பட்ட கடைகளை மறுநாள் திறந்து கொள்ளுமாறும் கூறினா். இதற்கு, வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து வியாபாரம் செய்து கொள்வதாக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனா்.