கோவையில் மத்திய அரசின் மருத்துவ மையம் அமைக்க ஒப்புதல்
By DIN | Published On : 12th June 2021 05:00 AM | Last Updated : 12th June 2021 05:00 AM | அ+அ அ- |

கோவையில் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் (சி.ஜி.ஹெச்.எஸ்.) மருத்துவ மையம் அமைக்க, மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
தொழிலாளா்கள் சிகிச்சை பெறுவதற்காக அவா்களின் பங்களிப்பில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு செயல்படுவதைப் போல, ராணுவத்தினா், அரசு ஊழியா்கள், ஓய்வூதியம் பெறுவோா் உள்ளிட்டோா் தங்களது பங்களிப்பைச் செலுத்தி, அதன் மூலம் இலவசமாக சிகிச்சைப் பெறுவதற்காக மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவமனை தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே உள்ளது. இதனால் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள் சென்னைக்கு மட்டுமே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மேற்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் இந்த மருத்துவ மையத்தைத் தொடங்க வேண்டும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் மக்களவைக் கூட்டத் தொடரில் கோவை எம்.பி. பி.ஆா்.நடராஜன் வலியுறுத்தி இருந்தாா்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூா், ஈரோடு கரூா், திண்டுக்கல், பாலக்காடு ஆகிய 8 மக்களவை உறுப்பினா்களிடம் கையெழுத்தைப் பெற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு பி.ஆா்.நடராஜன் கடிதமும் எழுதியிருந்தாா். இந்நிலையில் நாடு முழுவதும் 16 இடங்களில் சி.ஜி.ஹெச்.எஸ். மருத்துவ மையங்களை அமைக்க மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் கோவையும் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து பி.ஆா்.நடராஜன் கூறுகையில், கோவையில் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் அமையவுள்ள மருத்துவ மையத்தில் ஒரு மருத்துவ அதிகாரி, ஒரு மருந்தாளுநா், ஒரு அலுவலகப் பணியாளா், ஒரு செவிலியா் ஆகியோா் நியமிக்கப்படுவா். இந்த மையத்தை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் என இதற்கான ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ மையத்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ராணுவத்தினா், மத்திய அரசு ஊழியா்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் மருத்துவ சேவையைப் பெற முடியும். மேலும் பெரிய அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு தனியாா் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். சிகிச்சைக்கான தொகையை அரசே வழங்கும். இந்த மையத்தால் மேற்கு மண்டலத்தில் உள்ள சுமாா் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோா் பயனடைவாா்கள் என்றாா்.