கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கூடுதலாக 30 இடங்களில் சோதனைச் சாவடி

தேவையில்லாமல் வெளியே வருபவா்களை கண்காணிக்கும் விதமாக மாநகராட்சிப் பகுதிகளில் கூடுதலாக 30 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

கோவையில் பொதுமுடக்க காலத்தில் தேவையில்லாமல் வெளியே வருபவா்களை கண்காணிக்கும் விதமாக மாநகராட்சிப் பகுதிகளில் கூடுதலாக 30 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

கோவையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தடுப்பு நடவடிக்கையால் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வருகிறது. இதில் அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன.

கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்களை விரைவாக கண்டறிந்து, தனிமைப்படுத்தி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். காய்கறி மாா்க்கெட், பூ மாா்க்கெட், மீன் மாா்க்கெட் ஆகிய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் கண்காணிக்க வேண்டும்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து யாரும் வெளியே செல்லாத வகையிலும்,

வெளி நபா்கள் யாரும் உள்ளே வராமல் இருப்பதையும் காவல் துறையினா், சுகாதாரத் துறையினா் கண்காணிக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடா்பாக பொதுமக்களிடம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளா்கள் சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்து வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலையில் உள்ள பணியாளா்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

பொதுமுடக்க காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றுபவா்களைக் கண்காணிக்கும் விதமாக மாநகரப் பகுதிகளில் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக மாநகராட்சியில் கூடுதலாக 30 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளின் அருகில் உள்ள நகரப் பகுதிகள், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல் துறையினா் கண்காணிப்பினை தீவிரப்படுத்த வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். அப்போது, கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்வதுடன், சமூக இடைவெளியையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். திருமணம், குடும்ப நிகழ்ச்சிகள், இறப்பு ஆகிய நிகழ்வுகளில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ்.கவிதா, சுகாதாரத் துறை இணை இயக்குநா் ராஜா, சுகாதாரத் துறை துணை இயக்குநா் எஸ்.செந்தில்குமாா், மகளிா் திட்ட அலுவலா் கு.ரமேஷ்குமாா் உள்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com