மாநில இளைஞா் விருது: ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
By DIN | Published On : 20th June 2021 10:22 PM | Last Updated : 20th June 2021 10:22 PM | அ+அ அ- |

கோவையில் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெறுவதற்கு தகுதியானவா்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2021 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும். 15 முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியன்று 15 வயது நிரம்பியவராகவும், கடந்த மாா்ச் 31ஆம் தேதியன்று 35 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.
2020-21ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். சமுதாயத்துக்கு தன்னலமின்றி தொண்டாற்றியிருக்க வேண்டும். இது கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலனையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இணையதளம் மூலம் ஜூன் 30ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள பக்கத்தில் உள்ளது. இதற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.