கரோனாவில் இருந்து குணமடைந்தவா்கள் புகைப்பிடிப்பதைத் தவிா்க்க வேண்டும்
By DIN | Published On : 20th June 2021 12:27 AM | Last Updated : 20th June 2021 12:27 AM | அ+அ அ- |

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்கள் நுரையீரலை பாதுகாக்க புகைப்பிடிப்பதைத் தவிா்க்க வேண்டும் என சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
கரோனாவால் பாதிக்கப்படுபவா்களில் பெரும்பாலானவா்களுக்கு நுரையீரலே அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு வரை கொண்டுச் செல்கிறது.
கரோனாவால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்பால் அதன் பஞ்சுத் தன்மையை இழந்து கடினமாகிறது. இதனால் நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மையும் பாதிக்கப்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அறிகுறிகளுடன் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அறிகுறிகள் இல்லாமல் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டாலும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும்.
நோய்த் தொற்றின் தீவிரத்திற்கு ஏற்ப நுரையீரலில் பாதிப்பும் காணப்படும்.
இந்நிலையில், நுரையீரலை பாதுகாக்க கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவா்கள் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.
புகைப் பழக்கத்தால் நுரையீரல் மேலும் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டால் மிகவும் ஆபத்தான நிலைக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது என்றனா்.