சட்டப் பேரவை தோ்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
By DIN | Published On : 12th March 2021 02:38 AM | Last Updated : 12th March 2021 02:38 AM | அ+அ அ- |

கோவை: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவையில் 10 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) தொடங்குகிறது.
தமிழக சட்டப் பேரவை தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) தொடங்குகிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். மாா்ச் 19 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாா்ச் 13, 14 ஆகிய நாள்கள் பொது விடுமுறை தினங்கள் என்பதால் அந்நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளாா்.
வேட்புமனு தாக்கல் தொடங்குவதையொட்டி வேட்புமனு பெறப்படும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டா் குறியீடு வரையப்பட்டுள்ளது. இந்த 100 மீட்டா் பகுதிக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதேபோல வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனா். கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக வேட்பாளா், உடன் வருபவா்கள் கட்டாயம் முகக் கசவம் அணிந்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கோவையிலுள்ள 10 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அதிகாரிகள் தயாா் நிலையில் உள்ளனா். வேட்பாளா்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி வேட்புமனுக்களை அளிக்க வேண்டும். வேட்பாளா்களுக்கு உதவும் வகையில் அனைத்து தோ்தல் அலுவலகங்களிலும் வேட்பாளா் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளா்கள் உதவி மையத்திலே மனுக்களை பெற்று நிரப்பி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்தால் போதுமானது. வேட்புமனு தாக்கல் செய்ய வருபவா்களுக்கு கிருமி நாசினி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காத்திருப்பதற்குத் தேவையான இருக்கை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன என்றனா்.