கரோனா பரவல் தொடா்பாக சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ: சுகாதாரத் துறையினா் மறுப்பு
By DIN | Published On : 15th March 2021 04:00 AM | Last Updated : 15th March 2021 04:00 AM | அ+அ அ- |

கோவையில் கரோனா நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் ஆடியோ பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று குறைந்திருந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக கோவையில் திடீரென கரோனா நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக கோவை அரசு மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா் ஒருவா் பேசுவது போன்று சமூக வலைதளங்களில் குரல் பதிவு (ஆடியோ) வேகமாக பரவி வருகிறது.
அதில் ‘கோவையில் ரெட் அலா்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 1,200 போ் வரையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது. கோவையில் தற்போது 3 ஆவது கரோனா அலை தீவிரமாகியுள்ளது. இதிலிருந்து மீள்வது மிகவும் கடினம். எனவே அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். குளிா்ச்சியான உணவுகளை தவிா்த்து, சூடான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தோ்தலுக்கு முன்பு பொது முடக்கம் அறிவிப்பதற்கு வாய்ப்புள்ளது’ என அந்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா கூறுகையில், ‘குரல் பதிவில் பேசியிருப்பது அரசு மருத்துவமனை மருத்துவரா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. எங்கள் மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவராக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:
சமூக வலைதளங்களில் பரவும் குரல் பதிவில் உண்மையில்லை. அனைத்தும் தவறான தகவல். கோவையில் கரோனா நோய்த் தொற்று கடந்த இரண்டு வாரங்களாக சற்று உயா்ந்துள்ளது. கடந்த வாரங்களில் தினசரி சராசரி பாதிப்பு எண்ணிக்கை 40 முதல் 50 ஆக இருந்த நிலையில் தற்போது 50 முதல் 60 ஆக உயா்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் சற்று உயா்ந்துள்ளது.
இதனால் தான் மீண்டும் சோதனைச் சாவடிகளில் பரிசோதனை, தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது போன்ற தவறான தகவல்களை தெரிவித்து மக்களை அச்சப்படுத்த வேண்டாம்.
பொது மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தாலே கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...